_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...




அண்மையில் ‘விகிலீக்ஸ்’ என்ற இணைய உளவறிக்கையிடல் நிறுவனம் அமெரிக்க இராணுவத்தின் இரகசிய தகவல்களை உள்ளடக்கிய 90000ற்கும் மேற்பட்ட ஆவணங்களை வெளியிட்டது. இவ் ஆவணங்கள் அமெரிக்க இராணுவ வரலாற்றிலேயே மிகப்பெரிய அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இராணுவ இரகசிய தகவல்கள் கசிவுறுவதென்பது மிகவும் அறிதானதும் சாத்தியமற்றதுமாகும். அந்நிலையில் ‘விகிலீக்ஸ்’ ஆல் வெளியிடப்பட்ட தகவல் ஆவணங்கள் அமெரிக்க இராணுவ தகவல்களின் இரகசியத்தன்மைக்கு ஏற்பட்ட பாரிய இடி என்றே கொள்ளப்பட வேண்டும்.




அண்மையில் இடம்பெற்ற லண்டன் செய்தியாளர் மாநாட்டில் விமர்சகர்களால் “உலகின் மிகவும் அபாயகரமான மனிதர்களில் ஒருவர்” என வர்ணிக்கப்படும் விகிலீக்ஸ் இன் தாபகர் ஜூலியன் அஸ்ஸேன்ஜ் கலந்துகொண்டார். இவரின் ஆதரவாளர்கள் இவரை ஒரு வீரனாக நோக்குகின்றனர்.


அமெரிக்க அதிகாரிகள் இவ் இராணுவ இரகசிய தகவல் கசிவு தொடர்பில் அஸ்ஸேன்ஜ் உடன் பேசுவதற்கு விரும்புவதாக அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் இவர் எப்போதும் இவ்வாறு பேச்சுகள் நடத்துவதற்கு விரும்புவதில்லை எனவும் இவற்றிலிருந்து நழுவித் தப்பித்துக்கொள்ளக்கூடியவர் எனவும் அவுஸ்திரேலிய பத்திரிகையாகளர் அன்ரு fபௌலர் தெரிவத்துள்ளார்.

இவ் இரகசிய ஆவணங்கள் தொடர்பிலான பல்வேறு உண்மைகள் வரைவில் வெளிவரலாம். ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை இத்தகைய அதி இரகசியத்தன்மைவாய்ந்த இராணுவ தகவல்கள் எவ்வாறு விகிலீக்ஸ் க்கு பரிமாறப்பட்டது என்பது முக்கிய வினாவாக அமைந்துள்ளது என அல்-ஜெஸீரா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரசாங்கங்களும் வர்த்தக நிறுவனங்களும் தமது உள்ளாந்த செயற்பாடுகள் தொர்பான இரகசிய தகவல்களை கசிவுறாமல் பாதுகாப்பதென்பது அவற்றின் மிகப் பிரதான நடவடிக்கையாகும்.


விகிலீக்ஸ் இணையத்தளத்தின் வாத்தின் படி, மக்கள் தாம் தாபித்த அரசாங்கங்கள் தம்சார்பில் முடிவுகளை மேற்கொள்ளும் போது அல்லது அத்தகைய முடிவுகள் அவர்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் போது மக்கள் அத்தகைய முடிவுகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு உரிமையுடையவர்கள் (Right to know). அந்தவகையிலேயே எமது நிறுவனத்தின் செயற்பாட்டாளர்கள் சர்வதேச அளவிலான உண்மைத் தகவல் இயந்திரமென்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு நாடுகளில் கணனி வளைத்தள வழங்கன்களை (Computer Network Servers) நிறுவி தகவல் சுதந்திர வளயம் Information Freedom Zone) ஒன்றை உருவாக்கும் இலக்குடன் செயற்பட்ட, எப்போதும் மிகவும் அமைதியாகப் பேசக்கூடிய தயக்கமுடையவரான விகிலீக்ஸ் இன் தாபகர் ஜூலியன் அஸ்ஸென்ஜ் இன்று வித்தியாசமான செயற்பாடுகள் தொடர்பில் உலகம் பூராக பேசப்படக்கூடியவராக உருவெடுத்துள்ளார் என அல்-ஜெஸீராவின் செய்தி அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.

விகிலீக்ஸ் இணையத்தளம், அமெரிக்காவின் ஹெலிகப்டர் ஒன்று பக்தாத்தில் குண்டு மழை பொழிந்து ஊடகவியலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்த போது பதிவு செய்யப்பட்ட ஒளிநாடாவை இவ்வருட ஆரம்பத்தில் வெளியிட்ட போது பிரபல்யம் அடைந்தது.

இவ் ஒளிநாடா அம்பலப்படுத்தியவர்களை வெளிப்படுத்தும் இலத்திரனியல் கைரேகைகள் நீக்கப்பட்டு “Collateral Murder”  என்ற பெயரில் விகிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

விமர்சகர்கள் இந்த அசட்டுத்துணிவாக அபாயகரமான செயற்பாடு ஊடக செயற்பாடாக அமைய முடியாதென விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். ஆனால் உண்மையில் விகிலீக்ஸ் உலகின் பிரதான ஊடகங்களால் வெளிச்சத்திற்கு கொண்டுவர தவறிய தகவல்களையே மக்கள் மத்தியில் முன்வைத்தள்ளது என்பது நிசர்சனமான உண்மையாகும். அஸ்ஸேன்ஜ் இன்று அமெரிக்க அரசாங்கத்தின் எதிரியாகக் கொள்ளப்படுகின்றார்.

இணைய உளவறிக்கையிடல் நிறுவனமான விகிலீக்ஸ், அரசுகளின் இரகசிய தகவல்கள் வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கடுமையான எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் உலகம் பூராகவுள்ள அரசாங்கங்கள் தொடர்பில் மேலும் தம்மிடமுள்ள இரகசிய தகவல்களை வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.

பெண்டகன் மற்றும் அமெரிக்க அரச திணைக்களங்களின் இரகசிய ஆவணங்கள் வெளியிடப்படும் என்ற விக்கிலீக்ஸின் கூற்று, இவ்விரகசிய அரச ஆவணங்கள் அம்பலப்படுத்தப்படுவதை தடுப்பதற்கு அமெரிக்க அரசு சட்டரீதியாக அல்லது இராணுவ ரீதியாக என்ன செற்யும் அல்லது என்ன செய்ய முடியும் போன்ற முக்கியமான வினாக்களை எழுப்பியுள்ளது.

கடந்த சனிக்கிழமை ஏ.பி செய்தி சேவைக்கு அளித்த பேட்டியில் தனது அடையாளத்தை டேனியல் சிமிட் என பாதுகாப்பு காரணங்களுக்காக பிழையாக வெளிப்படுத்திக்கொண்ட விகிலீக்ஸின் பேச்சாளர்களில் ஒரவர், அமெரிக்காவின் இரகசிய தகவல்கள் தொடர்ந்தும் வெளியிடப்படும் என்றும் இது அரசுகள் மக்களுக்காக தீர்மானங்களை மேற்கொள்ளும் போது அவர்களுடன் வெளிப்படையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் மக்களின் தகவல் பெறும் உரிமையையும் உரிதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் பணி என்றும் தெரிவித்தார்.

வெளியிடப்படவுள்ள தகவல்கள் தொடர்பில் எதனையும் குறிப்பிட முடியாதென தெரிவித்த விகிலீக்ஸின் பேச்சாளர், ஆப்கானில் அமெரிக்கா மேற்கொண்ட யுத்தம் தொடர்பில் தமது இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட மறைக்கப்பட்ட தகவல்கள் இந்த யுத்தம் தொடர்பில் மக்கள் உண்மையை புரிந்து கொள்வதில் நேரடி பங்களிப்பு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

இவ் இரகசிய தகவல்கள் வெளியிடுவது அமெரிக்க அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்புக்கு அசு;சுறுத்தலை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.

இதற்கிடையில் அண்மையில் ஆப்கான் யுத்தம் தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத்தளம் 76,900ற்கும் மேற்பட்ட  புலனாய்வு அறிக்கைகள், இரகசிய இராணுவ தகவல்கள் மற்றும் அமெரிக்காவால் மறைக்கப்பட்ட பல்வேறு அசிர்ச்சியளிக்கும் உண்மைகள் உள்ளடங்கிய ஆவணங்களை வெளியிட்டிருந்தது.

அமெரிக்காவுக்கு இவ்விரகசிய தகவல்கள் எவ்வாறு கசிவுற்றது என்பது தொடர்பில் பெரும் தலையிடியை ஏற்படுத்தியுள்ளதுடன் இவ்விரகசிய தகவல் வெளியிடப்படுவதை வெள்ளை மாளிகை கடுமையான முறையில் கண்டித்துள்ளதுடன் இது ஆப்கானிலுள்ள அமெரிக்க துருப்புக்களை ஆபத்தில் தள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.

இவ்விரகசிய தகவல்கள் எவ்வாறு விகிலீஸ_க்கு கிடைக்கப்பெறுகின்றது என்பது இன்னும் புரியாத புதிராக இருக்கின்ற அதேவேளை தமது நிறுவனத்தில் நிறுவனத்தின் தாபகரும் பிரதம ஆசிரியருமான ஜூலியன் அஸ்ஸேன்ஜ் உட்பட 800 தொடக்கம் 1000 வரையான ஊழியர்கள் பணியாற்றுவதாக தெரிவித்தார்.

இதேவேளை விகிலீஸ் பல்வேறு நாடுகளில் தனது வளையமைப்பை கொண்டு செயற்படுவதாக தெரிவிக்கப்படுவதுடன் இதன் செயற்பாடுகள் ஊடக வரலாற்றில் ஒரு புரட்சியை உருவாக்கியுள்ளன என்று சர்வதேச ஆய்வாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.


References:

Al-Jazeera's news report on Wikileaks
AP News Reports
BBC News Report
The Gaurdian's report
http://wikileaks.org

-Shahull Hameed Mohamed Rizvy
  University of Colombo.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்