
மேற்குலகு தனக்கு ஆதரவானதை மாத்திரமே வைத்துக்கொள்ளும் என்பதற்கு நவம்பர் 07ஆம்திகதி ஆப்கானிஸ்தானில் நடக்கப் போகும் இரண்டாம் கட்ட வாக்களிப்பு நல்ல உதாரணமாகும்.
ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 20ஆம் திகதி மாகாண மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெற்றன. ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ஹமீட் கர்சாய் 54.9 வீதமான வாக்குகளைப் பெற்றதாகவும் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட அப்துல்லா 39 வீதமான வாக்குகளைப் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் இந்தத் தேர்தலில் மோசடிகள் நடைபெற்றதாகவும் அதனை இரத்துச் செய்து மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஐ.நா. அடங்கலான கண்காணிப்பாளர்கள் தெரிவித்ததை அடுத்து மீண்டும் நவம்பர் 7ஆம்திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்ற தேர்தலில், தான் வெற்றி பெற்றதாக அறிவித்திருந்த கர்சாய் மீள் வாக்களிப்புக்கு ஒப்புக்கொள்ள மறுத்திருந்த நிலையில் மேற்குலகத்தின் திரைமறைவு பேச்சுக்களையடுத்து அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார்.
ஆப்கானிஸ்தானின் தேர்தல் சட்டத்திற்கமைய ஜனாதிபதி வேட்பாளர் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லையானால் மீண்டும் வாக்களிப்பு நடத்தப்பட வேண்டும். உண்மையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் கர்சாய் 47 சத வீதமான வாக்குகளையே பெற்றிருந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கு ஏற்பாடாகி வருகிறது.
மீண்டும் தேர்தலை நடத்துவதற்கு கர்சாய் தலையசைத்ததையடுத்து ஐக்கிய நாடுகள் சபை வாழ்த்துத் தெரிவித்ததுடன் பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன. நவம்பர் 7ஆம்திகதி தேர்தலை நடத்த ஏற்பாடாகி வருகின்ற நிலையில் கர்சாய் மற்றும் அப்துல்லா ஆகியோரை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
ஜனாதிபதி ஹமீட் கர்சாய் அதிக வாக்குகள் பெற்றார். எனினும், அவருக்குக் கிடைத்த மொத்த வாக்குகளின் எண்ணிக்கையானது பதிவான மொத்த வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் குறைவானதாகவே இருந்தது என்று ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து தேர்தல் நடத்துவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 7ஆம்திகதி நடைபெறவுள்ள தேர்தலில் கர்சாயும் அப்துல்லாவும் போட்டியிடுகின்றனர். இதில் வெற்றி பெறுபவர் அடுத்த ஜனாதிபதியாவார்.
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தேர்தலில், ஜனாதிபதி ஹமீட் அல் கர்சாயியும் மற்றொரு முன்னணி வேட்பாளரான முன்னாள் வெளிநாட்டமைச்சர் அப்துல்லாவும் தாமே வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்தமையினால் பெரும் சிக்கல் தோன்றியது. இவ்வாறான அறிவித்தல்களினால் இரு தரப்பினருடைய ஆதரவாளர்களிடையே வன்முறைகள் பெருகும் அபாயம் தோன்றியதுடன் பெரும் பிரச்சினைகளும் உருவாகியிருந்தன.
ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி, மாகாண சபை தேர்தல்களில் வன்முறைகள் நடைபெற்றதாகவும் மோசடிகள் இடம்பெற்றதாகவும் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். அதே வேளை வாக்குப் பெட்டிகளைக் கைமாறும் விடயத்தில் அதிகாரங்கள் மாற்றப்படவேண்டும். அத்துடன் இதற்கேற்றாற்போல் அரசியலமைப்பில் மாற்றங்கள் தேவையென்றும் கண்காணிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.
தலிபான்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் என்ற வகையில் இத் தேர்தல் தலிபானியர்களின் அச்சுறுத்தல் வன்முறைகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்தது. ஏற்கனவே இருந்த தலிபான்களின் சிக்கல்களுடன் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் போதும் பெரும் வன்முறைகள் எழ வாய்ப்புள்ளதாக அஞ்சப்பட்டது.
நடைபெற்ற தேர்தலில் வரப் போகும் வெற்றி யாரைத் திருப்திப்படுத்துமோ இல்லையோ மேற்குலகைத் திருப்திப்படுத்துவதாக இருந்தே ஆக வேண்டும் என்ற நிலையில் கர்சாயியின் வெற்றியை ஏற்றுக் கொள்ள மேற்குலகம் மறுத்த அல்லது விரும்பாமையால் நவம்பரில் தேர்தல் நடைபெறுகிறது என்பதுதான் உண்மை.
ஆப்கானிஸ்தானில் நடைபெற்று முடிந்த தேர்தல் தலிபான்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டு வருவதாக அமைய வேண்டும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நடைபெற்ற வன்முறைகள் அதிகம் என்றே கணக்கிடப்பட்டுள்ளது. தலிபான்களின் மிரட்டல்களையும் தாண்டி இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையே தலிபான்களின் மூச்சாக இருந்து வருகிறது.
மேற்குலக ஆதரவுடன் பதவிக்கு வந்த ஜனாதிபதி ஹமீட் கர்சாய் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பதற்கான வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன் அவர் தெரிவு செய்யப்படுவதனையே மேற்குலகம் விரும்புவதாகவும் பார்க்கப்பட்ட நிலையில் மீள் தேர்தலுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டமை சந்தேகங்கள் பலவற்றை தோற்றுவித்துள்ளது.
ஆப்கானில் பொருளாதாரத்தை மேம்படுத்தி தொழில்களை ஏற்படுத்துவதுடன் இளைஞர்களை மேம்படுத்துவதுமே முக் கியமான பணியாக உள்ளது. முன்னாள் வெளிநாட்டமைச்சர் அப்துல்லா இவ்வாறானதொரு நல்ல நிலைமையைத் தோற்றுவிப்பதாக வாக்குறுதியளித்துள்ளார்.
ஆப்கான் ஓர் இஸ்லாமிய நாடு என்ற வகையில் அங்குள்ள வெளிநாட்டுப் படைகளின் நடவடிக்கைகள் விமர்சனத்துக்குரியதாகவே இருக்கிறது.ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் சண்டைகள், தாக்குதல்களால் பெண்கள், சிறுவர்கள் உயிரிழந்து வருகின்றமை நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் கேள்விக் குறியையே கொண்டிருக்கிறது. இந் நிலையில் மீண்டும் கர்சாய் பதவிக்கு வருவது விமர்சனங்களை அதிகமாக்கும்.
ஆப்கானின் தென்பகுதியிலுள்ள சில மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்களை தலிபான்களே ஆட்சி செய்கின்றனர். ஆப்கான் நாட்டின் 365 மாவட்டங்களில் 10 மாவட்டங்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. நாட்டில் பொருளாதார அபிவிருத்தியைச் செய்கிற, அழிந்து போயிருக்கிறவற்றை மீளவும் கட்டி எழுப்புகிற, கல்வியில் மேம்பாட்டை ஏற்படுத்துகிற, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துகிற, சிறுவர்கள், பெண்களுக்குப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துகின்ற உறுதியான ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டுமென ஆப்கான் மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
தலிபான்களின் பிரச்சினைகளே ஆப்கானில் பெரியது என்ற வகையில் அதற்கான தீர்வை முதலில் கொண்டு வருவதே அடுத்த ஜனாதிபதியின் கடமையாக இருக்கும் என்ற வகையில் புதியவர் ஒருவர் ஜனாதிபதியõக பதவிக்கு வருவதே சிறந்ததொரு தெரிவாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றவுள்ள அடுத்த ஜனாதிபதி செய்து முடிக்கவுள்ள பணிகள் ஆப்கானில் அமைதியைக் கொண்டு வருமா என்பதை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளே தீர்மானிக்கும்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கப் படைகளை அனுப்புவது சம்பந்தமாக அமெரிக்கர்களிடையே பாரிய பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏ.பி.சி. செய்திச் சேவை நடத்திய கருத்துக் கணிப்பீட்டில். இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது. 47 சதவீதமானோர் படைகள் அனுப்பப்படுவதை ஆதரிக்கின்ற அதேவேளை 49 சதவீத மானோர் எதிர்க்கின்றனர்.
ஆப்கானிஸ்தான் யுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக அமெரிக்க அரசாங்கத்திடமுள்ள திட்டத்தில் பாரிய குறைபாடுகள் உள்ளன என்பதற்கு ஏற்றாற் போல் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன், புஷ் நிருவாகம் ஆப்கான் விடயத்தை சரியாகக் கையாளவில்லை எனத் தெரிவித்ததன் மூலம் அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தார்.
ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக அமெரிக்கா தன் படைகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த இருக்கிறது.
ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய இரு நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத்துக்கு எதிரான போர்களில், ஈராக்கில் பெருமளவுக்கு தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்றே அமெரிக்கா சார்க் நாடுகள் நம்புகின்றன.
ஆப்கானிஸ்தானுக்கு மேலதிக படைகள் தேவைப்படுவதாக அங்குள்ள நேட்டோ தளபதிகள் அறிவித்துள்ள நிலையில், தாம் விட்ட குறைகளை நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்கா மேலதிக படைகளை அங்கு அனுப்புவதற்கு முயற்சித்து வருகிறது. ஆனாலும் ஜனாதிபதித் தேர்தலை ஒரு சாக்காகச் சொல்லி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் 2 இலட்சத்து 60 ஆயிரம் இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களில் 90 ஆயிரம் பேர் அமெரிக்க படையினராகும். இராணுவ பலத்தை 4 இலட்சமாக உயர்த்த அமெரிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதி ஒபாமா இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க இராணுவத்துக்கு உதவுவதற்காக மேலதிகமாக 17 ஆயிரம் படைகளை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்திருக்கிறது.
இப்போதுள்ள படைகளுக்குரிய ஆப்கானிஸ்தான் அரசுக்கான செலவு 5500 கோடியாகும். இதில் பெரும்பகுதியை அமெரிக்க அரசாங்கம் வழங்கி வருகிறது. படைகளை இரட்டிப்பாக்கினால், செலவும் இருமடங்காகும். பாதுகாப்புச் செலவைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையிலுள்ள அமெரிக்காவை உடனடியாக முடிவு எடுக்க விடாமல் செலவுகளே கட்டுப்படுத்துகின்றன. இதற்கிடையில் இங்கிலாந்து அரசும் தன்பங்குக்கு இராணுவ வீரர்கள் பலத்தை அதிகரிக்க இருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்காக நடந்த தேர்தலில் ஏற்படும் மாற்றங்கள் அமெரிக்கச் சார்பு அரசாங்கத்தை மீண்டும் ஆப்கானிஸ்தானில் கொண்டு வந்து விடுமோ என்ற பயம் அரபு நாடுகள் மத்தியிலும் ஆப்கான் மக்கள் மத்தியிலும் இருந்தது.
தலிபான்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி அவர்களை அரசியலுக்குள் கொண்டுவர நினைக்கும் அமெரிக்க அதிபர் அங்கு உறுதியான அரசாங்கம் அமையும் வரை படைகளை மேலதிகமாக அனுப்புவதில்லை என முடிவு செய்திருக்கிறார்.
தலிபான்கள் பலமடைந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கைப்பற்ற முன்னர் தலிபான்களை ஒழித்துக் கட்ட மேலதிக படைகள் அனுப்பப்பட வேண்டுமெனவும் கருதப்படுகிறது. எது எவ்வாறானாலும் ஆப்கானிஸ்தானில் நவம்பர் 07ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட வாக்களிப்பு முடிவு வெளிவந்து, அடுத்த ஜனாதிபதி பதவியேற்கும் வரை அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் பிரச்சினைகள் இருக்கவே செய்யும்.
யுத்தத் திருப்புமுனைகளுடனான வரலாற்றைக் கொண்ட ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதல்கள், மிரட்டல்களையும் தாண்டி இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் ஏற்பட்ட குழப்பங்கள் மீள் வாக்களிப்பு நிலையை உருவாக்கியிருக்கிறது. எப்படியானாலும் இந்த வருட இறுதிக்குள் ஆப்கானிஸ்தானின் அடுத்த தலைவரது பெயர் கண்டு பிடிக்கப்பட்டு விடும் என்று நம்புவோம்.
தமக்கு ஆதரவான ஒரு அரசாங்கத்தையே விரும்பும் மேற்குலகுக்கு, நடக்கவுள்ள தேர்தலில் நல்ல முடிவு கிடைக்கும் என்றே நம்பப்படுகிறது. இருப்பினும் ஜனநாயகத்தை நிரூபிப்பதற்கு மீண்டும் தமக்குக் கிடைத்திருக்கிற வாய்ப்பை ஆப்கான் மக்கள் நல்ல முறையில் பயன்படுத்துவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.




0 comments:
Post a Comment