_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை
_________________________________________________________
Loading...

 

அரபு உலகை கதிகலங்கச் செய்யும் எகிப்தின் மக்கள் புரட்சி

எகிப்தில் கடந்த  3 தசாப்த காலமாக சர்வாதிகார ஆட்சிபுரிந்துவரும் ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிராக எகிப்து மக்கள் கடந்த ஒன்பது தினங்களுக்கும் மேலாக போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள்.

அ ஹுஸ்னி முபாரக் ஆட்சியிலிருந்து விலகி வீட்டுக்குச் செல்லும் வரை நாம் எமது வீடுகளுக்குச் செல்லமாட்டோம் ஞ என விடாப்பிடியாக நிற்கும் எகிப்திய இளைஞர்கள் முழு உலகின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தமது போராட்டத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்று முன்தினம் கெய்ரோவிலும் அலெக்சாந்திராவிலும் ஒன்று கூடிய சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் நடத்திய அமைதியான ஆர்ப்பாட்டப் பேரணி ஹுஸ்னி முபாரக்கை மட்டுமன்றி முழு அறபு நாடுகளினதும் ஆட்சியாளர்களையும் கதிகலங்கச் செய்திருக்கிறது.

கடந்த 3 தசாப்த காலமாக எகிப்து மக்களின் அடிப்படை உரிமைகள் மீது கைவைத்து ஆட்சியைத் தொடர்ந்துவரும் முபாரக்கைப் பொறுக்க முடியாத இளைஞர் சக்தி ஒன்றே இன்று இந்தப் பாரிய போராட்டத்தை முன்னின்று நடத்துவது இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

`ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம்' எனும் பெயரைக் கொண்ட இந்த இளைஞர் படையணியானது மிகவும் திட்டமிட்டவகையில் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்திவருகிறது.   அரசியல் பின்னணியின்றி, கட்சி, இயக்க அடையாளங்களின்றி மேற்கொள்ளப்பட்டுவரும் இந்தப் போராட்டமானது முழுக்க முழுக்க மக்கள் மயப்பட்டதாகவே அமைந்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

வன்முறைகளில் ஈடுபடாத, இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தாத வகையில் மிகவும் கட்டுக்கோப்பான ஒழுங்கில் இடம்பெற்று வரும் இந்த போராட்டமானது முழு உலகிற்கும் ஒரு முன்மாதிரியான ஒன்றாகவே நோக்கப்படுகிறது. அதனால்தான் முபாரக்கின் உத்தரவையும் மீறி எகிப்து இராணுவம் இந்த மக்கள் போராட்டத்திற்கு பகிரங்க ஆதரவை வழங்கி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களும் இராணுவ வீரர்களை நோக்கி மலர்ச் சண்டுகளை நீட்டும் காட்சி இதற்குச் சான்று பகர்கிறது.

இதேவேளை ஐ.நா. மனித உரிமைப் பேரவை உள்ளிட்ட பல மனித உரிமைக் குழுக்களும் எகிப்திய மக்களின் போராட்டத்தை வரவேற்றுள்ளதுடன் மக்களின் ஜனநாயக விழுமியங்களை தலைவர்கள் மதித்து நடக்க வேண்டும் என்பதற்கு எகிப்து நல்லதோர் படிப்பினையாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்த மாத இறுதியில் ருனீசியாவின் சர்வாதிகார ஆட்சியாளர் பென் அலி நாட்டைவிட்டுத் தப்பியோடியதையடுத்து உத்வேகம் பெற்ற எகிப்திய இளைஞர்கள் தமது நாட்டின் சர்வாதிகாரத் தலைவரையும் வீட்டுக்கு அனுப்புவதில் குறியாகவிருக்கிறார்கள்.     அவர்களின் இந்த தாகத்துக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தவிர்ந்த பெரும்பான்மையான நாடுகள் அனைத்துமே ஆதரவை வெளிப்படுத்தியிருக்கின்றன.

பலஸ்தீன மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் இஸ்ரேலிய அரசுடன் மிக அந்நியோன்னிய உறவைப்பேணும் தலைவராகவே ஹுஸ்னி முபாரக் அடையாளப்படுத்தப்படுகிறார்.    இதனால்தான் முபாரக்கை பாதுகாப்பதற்கான மறைமுக முயற்சிகளில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் இஸ்ரேலிய அரசையும் கிலி கொள்ளச் செய்திருக்கும்     இந்த மக்கள் புரட்சியானது வெற்றி பெறுமானால் மத்திய கிழக்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் மாற்றங்கள் நிகழக்கூடும் எனவும் குறிப்பாக        இஸ்ரேலின் இருப்பு மற்றும் அதன் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான அத்தியாயம் இதன் மூலம் தொடக்கி வைக்கப்படும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

அண்மைக் காலமாக அரபுலக நாடுகளில் மலிந்துள்ள ஊழல், அதிகார துஷ்பிரயோகம், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் கருத்துச் சுதந்திரமின்மை என்பவற்றுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி எங்கு போய் முடியப் போகிறது என்பதே இன்று எல்லோரினதும் எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது.   அதனால்தான் ருனிசியாவினதும் எகிப்தினதும் நிலைமைகளை கூர்மையாக அவதானித்துவரும் அமெரிக்க சார்பு அரபு நாடுகள் தமது ஆட்சியைத் தக்கவைப்பதற்கான திரைமறைவு முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

உலக வரலாறுகளைப் புரட்டிப் பார்க்கும்போது தூய்மையான மக்கள் எழுச்சிகள் எதுவுமே தோற்றுப் போன பக்கங்களைக் காணமுடியாது. அதனால்தான் எகிப்து மக்களின் போராட்டமும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது.   இறுதியாக கிடைக்கும் தகவல்களின்படி முபாரக் சற்றுக் கீழிறங்கி வந்திருக்கிறார். பாராளுமன்றத்தை இடைநிறுத்தி வைத்திருப்பதுடன் இறுதியாக நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை மீள்பரிசீலனைக்குட்படுத்தவும் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டமாக என்ன வகையான தீர்மானங்களை அவர் மேற்கொள்ளப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஆனாலும் அவர் மீண்டும் மக்களைச் சமாளித்து அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் தலைசாய்த்து நடக்க முற்படுவாரேயானால் எகிப்து மக்கள் பொறுமையை இழப்பார்கள் என்பதையும் சில வேளைகளில் டியூனீசிய ஜனாதிபதிக்கு நடந்ததை விடவும் மோசமான ஒரு நிலையையே தானும் சந்திக்க வேண்டி வரும் என்பதையும் முபாரக் உணராமலில்லை.

அவ்வாறானதொரு துரதிஷ்டமான நிலை ஏற்படுவதற்கு முன்னர் முபாரக் நாட்டைவிட்டு வெளியேறி விட வேண்டும் என்பதுதான் அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails
உதயம்