எகிப்தின் அடாவடித்தனத்தை எதிர்த்து மாபெரும் ஆர்ப்பாட்டம்
லண்டன் – கடந்த செவ்வாய்க்கிழமை (05.01.2010) இரவு அல் அரிஷில் இருந்த லைஃப் லைன் -3 சர்வதேச நிவாரண உதவிக்குழு உறுப்பினர்கள்மீது எகிப்தியப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அடாவடித்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்குமுகமாக ஐரோப்பியத் தலைநகரங்களிலுள்ள எகிப்தியத் தூதுவராலயங்கள் முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு ஐரோப்பாவிலுள்ள பலஸ்தீன் ஆதரவாளர் கூட்டணி அழைப்புவிடுத்துள்ளது.
14 ஐரோப்பிய அமைப்புக்களை உள்ளடக்கிய மேற்படி கூட்டணி வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பாவின் பல பாகங்களிலும் தாம் மேற்கொள்ளவிருக்கும் எதிர்ப்புப் பேரணிகள் யாவும் ஒரே நேரத்தில் இடம்பெறும் என்றும், லைஃப் லைன் நிவாரணக் குழுமீது மேற்கொண்ட அடாவடித்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்குமுகமாகவும், கெய்ரோவுக்கு அழுத்தங்கொடுப்பதன் மூலம் அக்குழுவினரை எகிப்திய அதிகாரத்தரப்பினர் அச்சுறுத்தி மிரட்ட முனைவதை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கிலுமே இந்தப் பேரணிகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கூட்டணி வெளியிட்ட ஊடக அறிக்கையில், மனித உரிமைகள் அமைப்பினர், பலஸ்தீன் அனுதாபிகளான வெளிநாட்டவர், ஐரோப்பாவிலுள்ள பலஸ்தீனர்கள், அரபிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்வர் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பலஸ்தீன் அனுதாபிகளான துருக்கியர்கள்
இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை எகிப்தில் இடம்பெற்ற அடாவடித்தனமான சம்பவத்தில் சர்வதேசச் செயற்பாட்டாளர்கள் பலர் காயமடைந்ததையடுத்து, துருக்கியத் தலைநகர் இஸ்தான்பூலில் உள்ள எகிப்தியத் தூதுவராலயத்தின் முன்னால் ஒன்றுதிரண்ட ஆயிரக்கணக்கான துருக்கியர்கள், எகிப்தின் இதயமற்ற போக்கினை வன்மையாகக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோபத்தில் கொந்தளித்த ஆர்ப்பாட்டக்காரர்களுள் ஒரு பிரிவினர் எகிப்தியத் தூதுவராலயத்தை நோக்கிக் கற்களை எறிந்ததோடு, எகிப்திய அதிகாரத்தரப்பு மீண்டும் ஒருதரம் நிவாரண உதவிக்குழுவினர் மீது கைவைக்கத் துணிந்தால், எகிப்தியத் தூதுவராலயக் கட்டிடம் நொறுக்கப்படும் என்றும் அச்சுறுத்தல் விடுத்தனர்.
காஸா நோக்கிச் சென்றுள்ள மேற்படி சர்வதேச நிவாரண உதவிக்குழுவில் ஐந்து துருக்கியப் பாராளுமன்ற உறுப்பினர்களும் நிவாரணப் பொருட்களுடன்கூடிய நூற்றுக்கணக்கான துருக்கிய ட்ரக் வண்டிகளும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி: PIC




0 comments:
Post a Comment